[anbudan] Re: Chennai Anbargalukku - Oru Thedeer Santhippu
அலுவலக வேலைகளில் நிகழ்ச்சிக்குறிப்புகள் ( Minutes of Meeting) என்று சொல்வார்களே, அதற்கு நீர்தானய்யா பொருத்தமானவர்.
// ராஜா நிறைய பேசினார். காதலில் அதிகம்காயம்பட்டிருப்பார் என்று நினைக்கின்றேன்.
மொத்தத்தில் ராஜா..
காதலில் விழுந்தாலும்
எழுந்து
வாழத்துடிக்கின்ற ரோஜா //
சென்னை சந்திப்பு
ஆரம்பித்த கொஞ்ச நேரத்திற்குள்ளேயே நேரமாகின்றது என்று தப்பித்து சென்றுவிட்ட காந்தியை வன்மையாக கண்டித்துவிட்டும்
தனக்கு கிடைத்த குறைந்த கால அவகாசத்துலேயே முடிந்தவரை அன்பர்களை திரட்டி சந்திப்புக்கு ஏற்பாடு செய்த காந்தியை மென்மையாக பாராட்டிவிட்டும்
எனது பார்வையில் இந்த சந்திப்பின் சுவாரசியத்தைச் சொல்லுகின்றேன்.காந்தியிடமிருந்து அலைபேசி ஒலிக்க
"ஹலோ ரசிகவ் எங்கே இருக்கீங்க.."
"வந்துட்டே இருக்கேன் காந்தி.."
அடுத்து காதல் ராஜாவிடமிருந்து அலைபேசி"ஹலோ ரசிகவ் எங்கப்பா.."
"பக்கத்துல வந்துட்டேன் ராஜா.."
( அட என்னா பாசம்பா..)
நண்பர் குலாமோடு சுதந்திர தின பூங்காவிற்குச் சென்று பார்த்தேன். யாருமில்லை. பின் காதல் ராஜாவை அலைபேசியில் அழைத்தேன்
"உன்னையறிந்தால்..நீ உன்னையறிந்தால்" பாடல் ஒலிக்க .."ஹலோ ரசிகவ் வந்திட்டீங்களா.."
""ஆமா ராஜா நான் பூங்கா உள்ளதான் இருக்கேன்."
"என்ன பூங்கா உள்ளேயா.".என்று சுற்றி பார்த்துவிட்டு "நேரா உங்களுக்கு எதிரே பாருங்க ..நான் கை காட்டுறேன்" என்று கை காட்டினார்..
எனக்கு அவர் எங்கிருந்து கைகாட்டுகிறார் என்று தெரியவில்லை..சரி எங்கேயாவது நின்று நம்மை கவனித்துக்கொண்டு இருக்கின்றார் என நினைத்து "ஆமா ஆமா பார்த்துட்டேன் இதோ வந்துர்றேன்" என்று சொல்லிவிட்டு இங்கேதானே இருப்பார் பார்த்துக்கொள்ளலாம் என்று நான் நின்றிருந்து இடத்திற்கு எதிரே சென்றேன்..
அங்கே யாருமில்லை..அவர் யாரைப்பார்த்து கைகாட்டினாரோ தெரியவில்லை..அப்புறம்தான் தெரிந்தது அவர் நின்றிருந்து வள்ளுவர் கோட்டம் அருகே..நான் நின்றிருப்பது அதிலிருந்து சிறிது தொலைவில் உள்ள ஒரு பூங்காவில் என்று..பின் நிலைமை உணர்ந்து நான் அவர்கள் நின்றிருந்து இடம் நோக்கி நண்பரோடு நடக்க ஆரம்பிக்க
"ரசிகவ்..ரசிகவ்.."என்று எங்கிருந்தோ ஒரு குரல்.. என்னடா சாலையில் செல்பவர்களுக்கு கூட நம்மைத் தெரிகிறதே..நாம் அந்த அளவிற்கு புகழ்பெற்று விட்டோமா என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில்..
அட நம்ம ரமணன் சார்... காருக்குள்ளிலிருந்து கை நீட்டுகின்றார்..
அவரிடம் சைகை காட்டிவிட்டு "இதோ வந்துர்றேன் சார்..நீங்க போங்க" என்று சொல்லிவிட்டு ராஜா நிற்கின்ற பகுதிக்கு சென்றேன்..
காந்தியை அலைபேசியில் அழைத்தேன்.."ரசிகவ் ஒரு பெரிய விளம்பர பலகை தேங்க்யு கஸ்டமர் என்று இருக்கும் பாருங்க..தண்ணீர் லாரியா நிற்குது..அங்கேதான் நிற்கின்றோம்" என்று சொல்ல இடத்தை கண்டறிந்து விரைந்தோம்..
விளம்பரப் பலகையின் வெளிச்சங்கள் பளிச்சிட அன்புடன் குடும்பத்தின் உறுப்பினர்களான காந்தி - ராஜா - சாபண்ணா - அபுல் - கென் ஆகியோர் நின்று கொண்டிருக்க அவர்களிடம் நிலவு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டது
"சாபண்ணா எப்படியிருக்கீங்க..? நாம பார்த்திருக்கலாம்..ஆனா பேசியது கிடையாது.."
"எப்படியிருக்கீங்க காந்தி..இதுதான் நம்ம புது உறுப்பினர் குலாம் ரசூல்"
"நீங்க.." என்று கென்னைப்பார்த்து கேட்டேன்..
"கென் "என்று சொல்லிவிட்டு உடனே அமைதியாகிவிட்டார்
அடுத்து காந்தியிடம் கேட்டேன்.."காந்தி இது யாரு" என்று வெள்ளையாக சீரியல் கதாநாயகன் மாதிரி நின்றுகொண்டிருந்த ஒருவரைக் கேட்க
அது அபுல் என்று காந்தி சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஒரு பைக் வேகமாய் வந்து நிற்க ப்ரியனும் அகிலனும் வந்து இறங்கினார்கள்.
பின்னர் மீண்டும் அந்த சுந்திரதினபூங்காவை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.வழியில் ஒரு இடத்தைக் காட்டி "இங்கே உட்காரலாமா" என்று சாபண்ணா கை காட்டிய இடத்தைப் பார்த்தால் அங்கே ஒரு ஒயின்ஸ் கடை..
""ஹா ஹா ஹா"" என்று காந்தி சிரிக்க ஆரம்பிக்க எனக்கு உடனே சிரிப்பு வரவில்லை என்றாலும் அந்த நேரத்தில் சிரிப்பதுதான் நாகரீகம் என்று கருதி சிரித்தேன்.. நடக்க ஆரம்பித்தோம்..
"காந்தி உங்க கணவர் நல்லாயிருக்காங்களா..?"
"ம்..ம் நல்லா இருக்காங்க ரசிகவ்.."
"எப்ப போறீங்க சாபண்ணா..உடம்பு பரவாயில்லையா"
"ம் பரவாயில்லை..நான் சீக்கிரமாய் கிளம்பிடுவேன்.."
"ஹலோ நீங்க.."என்று மறுபடியும் கென்னைப்பார்த்து கேட்க
அவர் "நான் கென்" என்று சொல்ல.". சாரி சாரி மறந்துடுச்சு...கவிதையெல்லாம் பின்னுறிங்க இப்ப அமைதியா இருக்கீங்க" என்று உரையாடியபடி பூங்கா வந்தடைந்தோம்.
சுதந்திர தின பூங்கா சென்று அங்கு சுதந்திரமாய் தனது துணைவியாருடன் பேசிக்கொண்டிருந்த ரமணன் சாரை தொந்தரவுபடுத்தி ஒரு சுவரில் வரிசையாய் அமர்ந்தோம்.
எங்கெங்கோ இருந்தாலும் பண்டிகை காலங்களில் ஒன்று சேர்கின்ற உறவினர்களைப்போல ஒன்று சேர்ந்தோம்.
நான் ப்ரியன் காதுகளில் கிசுகிசுத்துக் கொண்டிருக்க..ரமணன் சார் மற்றும் அவர்கள் துணைவியார் மற்றும் காந்தி தனியே ஒரு ஆட்சி நடத்திக்கொண்டிருக்க.. அபுல் - குலாம் - கென் - அகிலன் அங்கே தனியே தர்பார் நடத்திக்கொண்டிருக்க..
நான் ரமணன் சாரிடம் "சார் ஒரு பாட்டை எடுத்து விடுங்க சார்" என்க ரமணன் சார் பாட ஆரம்பித்தவுடன் கல்லெடுத்து எறிந்தவுடன் சிதறி ஓடிய புறாக்கள் தானியங்களைக் கண்டு கொத்தி தின்பதற்கு ஒன்று சேர்வதைப்போல ..காயங்களைக் கொத்தி தின்ன மீன்கள் கால்களைச் சுற்றி வருவதைப்போல அனைவரும் ரமணன் அவர்களைச் சுற்றினோம்..பத்துவிரல் அத்தனெக்கும்
பச்ச மருதாணி வச்சி
ஓ..ஹோ..
பந்துநெலா பூப்பறிக்க
வந்தெறங்கி நின்னதப்போல
படியில மிதந்து வர்றாளே
ஏடா..தம்பி
பச்ச புள்ளையா ? தெய்வமா?
கத்துங் கடல் ஓரத்துல
கால்நனக்கிற ஈரத்துல
மெத்தமணல் முதுகுறுத்த
நட்சத்திரம் கொட்டிச் சிரிக்க
அத்தனையும் எண்ணிக்கிடக்காதே
ஏலா..தம்பி..
பக்தனா ? பைத்தியம்தானா?சுகமும் துக்கமும் சுழட்டி ஆடும்
சொக்கட்டான் விவரமெல்லாம்
முகம் முழுக்க வரியாகி
மூலையில முனுமுனுக்கும்
அரை உசிரா ? ஆத்தியா?
ஏலா தம்பி
அவதான் ஆதிசக்தியா?கண்ணுக்குள்ள கண்ணுவச்சு
கனவுங் கனவுங் கும்மியடிக்க
கம்மாயில கெண்ட துள்ள
கண்ணைத்தாண்டி நெஞ்சைத்தும்பஒரசும் சோடியைப்பாரு ஏடா தம்பி
ஒண்ணா? ரெண்டுல ஒண்ணா?நட்டநடு ராத்திரிதான்
நம்ம கோவில் மண்டபந்தான்
கட்டயெல்லாம் மறந்தபோயி
கண்ணொறங்கும் வேளதான்
காதுல சலங்கை கேக்குதே! ஏடா தம்பி
கனவா காளியேதானா?ஊரு முழுக்க நூறு வெசயம்
ஊமியவலாக் கொட்டிக் கெடக்கு
ஆரும் வந்து அள்ளிக்கலாம்
ராச்சியமா ஆண்டுக்கலாம்மரமா நெலச்சுப்புட்டேண்டா ஏடா தம்பி
மழயிலே சலசலத்தேண்டா
அவரது பாடல் எங்களது இதயத்தை எல்லாம் ஒரு தனித்தீவில் உட்காரவைத்து குளிப்பாட்டிவிட்டு வந்ததைப் போல மென்மையாக இருந்தது. இடைஇடையே அவரது மனைவியும் பாடல் வரிகளை எடுத்துக்கொடுத்தது அவர்களின் அன்னியோன்யத்தை உணர்த்தியது.கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாதுல்ல..
ரமணன் சார் சுத்திப்போட்டுக்கோங்க..தலைப்பை மட்டும் "ரமணனைக் கேளுங்கள்" என்று வைத்துவிட்டு எதனைக் கேட்டாலும்; என்னிடம் கேட்காதீர்கள் என்று கூறி தன்னை தனக்குள் அடக்கிக்கொள்ளும் ரமணன் ரொம்பவும் வித்தியாசமானவர்தான்;.
அடுத்து ஒரு காதல் பாட்டு காதல் ராஜாவுக்காக என்று ஆரம்பித்து உன்னி கிருஷ்ணன் மாதிரி பாடினார். இல்லை இல்லை உன்னி கிருண்ணன் தான் இவரைப்போல பாடுகின்றார்.மொத்தத்தில் ரமணனை
கண்டவர்களுக்கு பெருமை
காணாதவர்களுக்கு பொறாமை
பின்னர் அனைவரது கைதட்டலுக்கிடையே காதல் ராஜாவை பேச அழைத்தோம்..
"நான் என்ன பேச" என்று பற்பசை விளம்பரத்திற்கு நடிப்பதுபோல சிரித்துவிட்டு "... காதல் என்பது" என பேச ஆரம்பித்தார்.
"தவறிப்போய் வேலைவாய்ப்பு தகவல் சொல்லிடாதீங்க.."என்று நான் கூற
சிரித்துக்கொண்டே தொடர்ந்தார்.
- செய்யதலி சொன்ன பிறகுதான் தனக்கு சுயதொழில் மீது ஆர்வம் வந்தது என்று செய்யதலியை புகழ்ந்து பேசினார்
- "தூக்கம் விற்ற காசுகள் கவிதையை சமீபத்தில்தான் சேது அவர்கள் ஞாபகப்படுத்த நான் வாசித்தேன். மிக அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் ரசிகவ்" என்க
"அடப்பாவிங்களா காந்தியடிகள் இறந்து போனதையே இப்போதான் படிக்கிற மாதிரி அந்தக்கவிதையையே இப்பத்தான் படிக்கிறீங்களா" என்று நான் கேட்டுவிட்டு, சொன்னேன்"அந்தக்கவிதை மூலமாகத்தான் நான் அன்புடனில் இணைந்தேன் " என்று- வறுமையும் காதலும் தான் தனக்கு எல்லாம் கற்றுக்கொடுத்தது என்று நிறைய விசயங்கள் பேசினார்
- "நீங்க எழுதுன காதல் கடிதத்தை எங்ககிட்ட கொடுங்க அந்தப்பொண்ணோட அண்ணன்கிட்ட கொடுப்போம்" என்று நான் பழைய சோக் ஒன்று அடிக்க
உடனே வலது பக்கத்தில் இருந்து கென் எரிச்சலடைந்து அதனைக் காட்டிக்கொள்ளாமல் "ரசிகவ் எப்ப பார்த்தாலும் காதலியோட அண்ணன்கிட்ட அடிவாங்குறதைப் பற்றியே சொல்லிக்கொண்டிருக்கின்றாhர்.. அவருக்கு நிறைய அனுபவம்னு நினைக்கிறேன்.. "என்று நக்கலடிக்க
"அய்யோ அனுபவம்லாம் இல்லீங்க" என்று நான் பதறுவது போல நடித்து மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.. சந்தேகம்னா கனடாவில் கேட்டுக்கொள்ளுங்கப்பா என்று
முன்னால் நின்று தயங்காமல் பேசுவதும் ஒரு கலைதான். அது ராஜாவிடம் நிறையவே இருந்தது.
ராஜா நிறைய பேசினார். காதலில் அதிகம்காயம்பட்டிருப்பார் என்று நினைக்கின்றேன்.
மொத்தத்தில் ராஜா..
காதலில் விழுந்தாலும்
எழுந்து
வாழத்துடிக்கின்ற ரோஜாஅதன்பிறகு சாபண்ணாவை பேச அழைத்தோம்
"நான் என்ன பேச..?" என்று கிண்டலாகவே ஆரம்பித்தார் .
"உங்க உடம்பு எப்படியிருக்கு" என்று ரமணன் சார் கேட்க
"உடம்பு பரவாயில்லை. மருத்துமனையில் தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையைப்பற்றி கூறினார் ரமணா படத்தில் காட்டிய ஒரு மருத்துமனை சம்பவம் போலத்தான் என் வாழ்க்கையில் நடந்தது. அங்குள்ள நர்சுகளுக்கு ஊசி போடவே தெரியவில்லை.
( இதயத்துல ஊசி போடுறாங்கல்ல)..நரம்புல குத்தாம வேறு எங்கோயோ குத்த பின்ன நம்ம அன்புடன் சுரேஷ் தான் நர்சுகளை அழைத்து கத்தினார். உடனே அவர்கள் சாரி கேட்டார்கள்."அன்புடனுக்கு வந்தது எப்படி?
புகாரி அவர்கள் அழைத்ததன் பேரிலும் நம்ம ஆசிப் மீரானுக்காகவும் வந்தேன்
கட்டாயமா அல்லது வற்புறுத்தலா? தெளிவாச்சொல்லுங்க என்று வம்புக்கு இழுத்தோம்
ம்..ம்..வற்புறுத்தல்தான்..
சரி அடுத்து அன்புடனில் என்ன பண்ணப்போறீங்க?
ஆசிப் மீரானைப் பிடித்து வம்புக்கு இழுக்கணும்
சரி அன்புடனைப் பற்றி சொல்லுங்க?
மற்ற குழுமங்களில் பிராமண எதிர்ப்பு அல்லது இஸ்லாமிய எதிர்ப்புகள்தான் மேலோங்கி நிற்கின்றது. ஆனால் இந்தக் குழுமம் மதவாத வாக்குவாதங்கள் எதுவுமின்றி சமத்துவமாக இருக்கின்றது . இதற்கு கண்டிப்பாக புகாரியை பாராட்டியே ஆகவேண்டும்.
என்று புகாரியைப் பாராட்டினார்."முதலில் கொஞ்சம் இதுபோன்ற தாக்குதல்கள் இருந்தன. பின்னர் அவற்றை அன்புடனின் கட்டுப்பாடுகள் மூலம் புகாரி அவர்கள் நிக்கிவிட்டார்.." என்று நான் கூற அதற்கு விக்கி ஆமாம் என்பது போல தலையசைத்தார்.
சாபண்ணா
உருவத்தை காலம் தின்றுவிட்டாலும்
பருவத்தை இளமையாக வைத்திருப்பவர்
அவருக்குப் பிறகு அகிலனை அழைத்தோம் பேசுவதற்கு. அவர் இலங்கையிலிருந்து சென்னை வந்து 10 தினங்கள்தான் ஆகின்றது. இலங்கையைப்பற்றி பேச ஆரம்பித்தார். அவருக்கு வயது 23 தான் ஆகின்றது. ஆனால் வாழ்க்கையில் நிறைய அனுபவங்கள் அவருக்கு...
இலங்கைத்தமிழில் மிகவும் அழகாக தெளிவாக இலங்கையின் சோகத்தை சிரித்துக்கொண்டே விவரித்தாhர்
"நான் இலங்கையில் ஓஎல் படித்திருக்கின்றேன். அங்கு ஒரு பத்திரிக்கையின் ஆசிரியனாக இருந்திருக்கின்றேன். ஆனால் நான் படித்த அந்த படிப்புக்கு இந்தியாவில் என்ன மதிப்பென்று தெரியாது. ப்ரியன்தான் சொன்னார் இந்தியாவில் அதன் மதிப்பு பிளஸ் டு என்று."
"அங்கு பத்திரிக்கை ஆசிரியனாக வேலை பார்த்தேன். இங்கு நான் பத்திரிக்கை மடிப்பவனாகத்தான் வேலை பார்க்க வேண்டும்" என்று கூறிய பொழுது இத்தனை வயதில் இவ்வளவு தெளிவாக காயத்தின் வலியோடு பேசும் அகிலனை நினைத்து கண்ணீர்தான் வந்தது.மேலும் அவர் கூறிய தகவல்கள் எங்களுக்கு ரொம்பவும் புதிதாக இருந்தது.
"இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தமிழர்களின் நிலையை வருபவர்கள் யாருமே தமிழர்கள் பகுதிக்குள் வருவதே இல்லை. கொழும்பில் இருந்துகொண்டே அங்குள்ள சில தமிழர்களின் நிலையை கேட்டுவிட்டு திரும்பிவிடுகின்றார்கள்."
"சமீபத்தில் கூட இயக்குநர் பாரதிராஜா எங்கள் பகுதிக்கு வந்து பேசினார் முக்கால் மணி நேரம் பேசிவிட்டு பின் நிறுத்தினார். என்னய்யா ஜனங்க நீங்க..நான் இவ்வளவு பேசுறேன்..நீங்க கைதட்டவே இல்லை என்று கேட்கின்றார்"
"அது அவர் மீது தவறு இல்லை. நீங்கள் அவ்வாறு வளர்த்திருக்கின்றீர்கள். எதற்கெடுத்தாலும் கைதட்டி தட்டி அவர்களை எதிர்பார்க்க வைத்திருக்கின்றீர்கள். நான் அங்குள்ள மக்களுக்கு அதெல்லாம் தெரியாது. என்ன பேசுகிறார்கள் அந்த பேச்சு மூலம் தமிழர்களுக்கு ஒரு விடியல் வந்து விடாதா என்றுதான் கவனிக்கின்றார்கள்."
"இங்கு உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் இராணுவம் வந்த பாதுகாக்கின்றது. ஆனால் அங்குள்ள தமிழர்களுக்கு இராணுவம் ஒரு பாதுகாப்பாகவே இருந்ததில்லை. "
"இஸ்ரேல் பாலஸ்தீனம் போராக இருக்கட்டும் அமெரிக்க ஈராக் போராக இருக்கட்டும் அவர்கள் தாக்குகின்ற ஏவுகணைகள் ஏதாவது இலக்கை தீர்மானித்து ஏவப்படுகின்றது. ஆனால் இவர்களின் ஏவுகணைக்கு எந்தவிதமான இலக்கும் கிடையாது. தமிழர்களின் பகுதியை நோக்கி வைத்துவிடுவார்கள். போய் எந்த இடத்தில் சென்று விழுகிறதோ என்று எந்நேரமும் பயந்து கொண்டே இருக்க வேண்டும்.""எனது தாயார் கூட சொல்லியிருக்கின்றார்கள். நான் அவர்கள் வயிற்றில் இருக்கும்பொழுது அவர்கள் குண்டுக்குப் பயந்து தப்பித்து தப்பித்து சென்றிருக்கின்றார்களாம். "
"கிளிநொச்சி - யாழ்ப்பாணம்-........... அடங்கிய 6 பகுதிகள்தான் தமிழர்களின் பகுதிகள். எவரும் அந்தப்பகுதிகளுக்கு வந்து விசாரிப்ப"தே இல்லை."கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் மணிரத்னம் காட்டிய காட்சிகள் எல்லாம் அந்தகாலத்து விடுதலைப்புலிகள். அவர்கள் இந்திராகாந்தி காலத்து விடுதலைப்புலிகள் ஆகும். அவர் படத்தில் ஒரு தமிழன் சிங்களருடன் இணைந்து விடுதலைப்புலிகள் பகுதிக்கு வருவதாக காட்டியுள்ளார். ஆனால் இப்பொழுது தமிழனும் சிங்களனும் ஒன்றாய் இருப்பதே கிடையாது."
"அதுபோல சமீபத்தில் சன்தொலைக்காட்சியில் காட்டிய விடுதலைப்புலிகளின் நினைவு கொடியேற்று சம்பவம் - உரை எல்லாம் சென்ற வருடம் எடுக்கப்பட்டவைகள்."
"இதுபோல மீடியாக்கள் எல்லாம் எங்களைப் பற்றிய செய்திகளைத் தொட்டுச் செல்கின்றனவே தவிர யாருக்கும் உண்மையான அக்கறையில்லை. தங்களையும் தமிழர்களுக்கு ஆதரவாக காட்டிக்கொள்ளவேண்டும் என்பதற்காக இலங்கைத் தமிழர்கள் பற்றிய செய்தியை வெளியிடுகின்றன."
"இங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 600 ரூபாயிலிருந்து இப்பொழுது 1000 ரூ வரை வந்திருக்கின்றது. நாங்கள் ஒரு சிறு குப்பியில் பெட்ரோல் வாங்கிக்கொள்வோம் அதன் விலை 100 ரூ. வண்டியில் வேப்பம் எண்ணெய் கலந்த ஒரு வித ஆயிலை ஊற்றிவிட்டு அதில் ஒரு சொட்டு பெட்ரோல் விடுவோம்."
("நமக்கு கார் மாதிரி அங்கு சைக்கிள் வைத்திருந்தாலே லக்சரி தான்" என்று சாபண்ணா அவர்கள் இடையில் குறுக்கிட்டு தன் மூக்கு கண்ணாடியை கழட்டி கை நீட்டி சொல்லும்போது என் கண்ணில் குத்திவிட்டார்)
"நீங்கள் தொலைக்காட்சியில் சானல் மாற்றிக்கொண்டே இருக்கின்றீர்கள். ஆனால் எங்களுக்கு ஒரே ஒரு சானல்தான். அதில்தான் உலக நடப்புகளை தெரிந்துகொள்ளவேண்டும்."
"அங்கு பிச்சைக்காரர்களே கிடையாது . அதுபோல சோறும் கிடையாது .எல்லாருமே பிச்சைக்கார்கள்தான்."
(அவர் இப்படிச் சொல்லும் போது ரமணன் சார் அவர் சொல்லுவதை தாங்க முடியாமல் அழுகின்ற நிலைக்கு தள்ளப்பட்டு தலையைக் குனிந்து கொண்டார்எல்லாருக்கும் அதே நிலைதான் )."இங்கு சென்னையில் பார்க்கின்றேன் எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருக்கின்றது. கண்ணைப்பறிக்கும் வெளிச்சத்தில் விளம்பரங்கள் இருக்கின்றது. ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களது நிறுவனத்தின் பெயர்களை மக்கள் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என நினைக்கின்றார்கள். சாலைகளில் இத்தனை அசுத்தம் இருக்கின்றது ஆனால் அதனை மறைக்கத்தான் இவ்வளவு வெளிச்சமாக இருக்கின்றதோ எனத் தோன்றுகின்றது..""அங்கு விடுதலைப்புலிகளின் கண்காணிப்பில் இருக்கின்ற பகுதிகளில் அப்படியில்லை. எல்லாம் சுத்தமாக இருக்கும். அது மட்டுமல்ல நிதி - நிர்வாகம் - போக்குவரத்து துறை- காவல் - என்று ஒவ்வொன்றையும் திட்டமிட்டு தனி இராஜ்ஜியத்தையே நடத்தி வருகின்றார்கள். அவர்கள் கண்டிப்பாக தனித்தமிழ் ஈழத்திற்கு பாதுகாப்பாக இருப்பார்கள்.""ஜரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களில் சிலருக்கு ஏதாவது நல்ல செய்திகள் வந்துகொண்டே இருக்கவேண்டும். நல்ல செய்திகள் என்றால் சிங்கள இராணுவத்தின் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் இத்தனை சிங்களர்கள் மரணம் என்ற செய்திதான் . ஆனால் போர் நடக்கின்ற சூழ்நிலையில் இருக்கின்ற தமிழர்களுக்கு அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை"
"அவர்கள் தருகின்ற நிதிக்கு உண்டான லாபத்தை அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். அங்கு கட்டாய நிதி வசூல் நடைபெறுகின்றது."
ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கைத்தமிழர்களுள் சிலர் போர்ச் சூழ்நிலையை விரும்புகின்றார்கள் என்றும் அவ்வாறு போர் நடைபெற்றுக் கொண்டே இருந்தால்தான் தங்களுக்கு ஐரோப்பிய நாடுகள் தருகின்ற சலுகைகள் தொடர்ந்து கிடைக்கும் என்றும்; ஒரு செய்தி பரவலாக பேசப்படுகின்றதே அதுபற்றி?
"ஆம் அது உண்மைதான். அவ்வாறு நினைக்கின்றவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்கள் சலுகையின் மூலமாக சுகபோகங்களை அடைந்திருக்கின்றார்கள். அவர்களின் போர்ச்சூழலின் பாதிப்பு தெரியாது " என்றும் கூறினார்.
"இந்தப் போரானது எனது தந்தையின் காலத்தில் இருந்தது. எனது காலத்தில் இருக்கின்றது எனக்கு பிறக்கப்போகின்ற குழந்தையின் காலத்திலும் இருக்கும்" என்று அவர் கூறியது நெஞ்சை இறுக்கமாக அடைத்துக்கொண்டது.
அகிலன்இலங்கையிலிருந்து வந்து
இதயத்தில் ஒட்டிக்கொண்டார்அகிலன் சோகத்தையும் சிரித்துக்கொண்டே விவரித்தது இன்னமும் சோகத்தைக் கொடுத்தது. சாபண்ணா அவர்கள் கேட்டேவிட்டார்கள்.
என்ன அகிலன் இவ்வளவு சோகத்தை சிரித்துக்கொண்டே சொல்லுகின்றீர்கள்என்று. அதற்கும் அகிலனின் பதில் சிரிப்புதான்.
அகிலன் பேசி முடியும்பொழுதே கிட்டதட்ட இருட்டிவிட்டது.அவருடைய பேச்சின் மூலம் அவருக்கு கிடைத்த பயங்கரமான அனுபவம்தான் நம் கண்முன்னால் நிற்கின்றது.
பூங்காவில் விசில் ஊதி எங்களை வெளியில் செல்லுமாறு நாசூக்காக கூறினார்கள். உடனே நாங்கள் முடியும் தருவாயில் வந்து விட்டதை எண்ணி மனம் வருந்தினோம்.
நான் எழுந்து "இந்த சந்திப்பு வீணான அரட்டையாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அகிலனின் பேச்சு இந்த சந்திப்புக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுத்தது. ஆகவே வந்து சிறப்பித்ததற்கு மிக்க நன்றி " என்று வாழ்த்துரை சொல்லிவிட்டு கலைய ஆரம்பித்தோம்
வாசற்படி வரையிலும் அகிலனின் பேச்சைப்பற்றிதான் பேசிக்கொண்டே சென்றோம்.
ப்ரியன் - அகிலனை அழைத்துக்கொண்டு மறுநாள் குங்குமம் அலுவலகம் வரை செல்வதாக கூறினார். அகிலனின் வேலை சம்பந்தமாக பொறுப்பாசிரியர் கௌதம் அவர்களை சந்திக்கச் செல்கிறார் அகிலன். அவருக்கு நல்ல வேலை கிடைக்க அனைவரின் ப்ரார்த்தனைகளும் தேவை.
பின் ரமணன் சாரையும் அவர்கள் மனைவியும் அவர்களுடைய காரில் ஏற்றி விட்டோம். கார் மெல்ல நகர, ரமணன் சார் இறங்கி வந்து, "யாராவது என் காரில் வர்றீங்களா நான் போகின்ற வழியில் இறக்கி விடுகின்றேன் என்க" யாரும் அவர் செல்லுகின்ற வழியில் பயணிக்கவில்லை ஏன்னா அவர் வழி தனி வழி.. :)உடனே அவர் விடைபெற்று கிளம்பினார்நீங்க எங்கே இருக்கீங்க? என்று கென்னிடம் கேட்க
அமைதியாக பதில் கூறினார்
கென்
கவிதைக்கு அதிபதி
கண்ணெதிரே அமைதிஅபுல் எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருந்தார்.
அதன் பின் அபுல் கென் ராஜா ஆகியோர் விடைபெற்றுக் கிளம்பினார்கள்.
நான் ப்ரியனிடம் "உங்களுக்காக யாரோ காத்திருக்காங்கன்னு நினைக்கின்றேன். சீக்கிரம் போங்க" என்க.."அய்யோ அப்படியெல்லாம் யாருமில்லைங்க "என்று சொல்லிக்கொண்டே.. அகிலனை அழைத்துக்கொண்டு தனது பைக்கை நோக்கிச் சென்றார்
விக்கி
நடமாடும் உதவிநிலையம்
பின்னர் நானும் நண்பர் குலாமும் ஒரு ஆட்டோவை அழைத்தோம்;. குலாம் திரும்பும் வழியில் புலம்பிக்கொண்டே வந்தார். "அவர்களையெல்லாம் சந்தித்தது மனசுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கின்றது. இந்த பரபரப்பான வாழ்க்கையில் இதுபோன்ற அமைதியும் நண்பர்களும் அனைவரக்கும் தேவை."ஆட்டோவிலிருந்து சிறிது தலைதிருப்பி பார்த்தேன்.மழை பெய்து ஓய்ந்ததைப்போல அந்தப் பூங்கா காட்சியளித்தது. ஆனால் ஈரமானது மண் அல்ல இதயங்கள். பேசி சிரித்தது எல்லாம் அந்த மரங்கள் கடன் வாங்கிக் கொண்டு தென்றலாக வீசியது.
அனைவருக்கும் நெல்லை அல்வா கொடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவசரத்தில் மறந்துவிட்டது. நான் அறையில் வாங்கி வந்திருந்த திருநெல்வேலி அல்வா ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டே இருந்தது. அடுத்த சந்திப்புக்குள் அந்த அல்வா கெட்டுவிடும் ஆனால் எப்பொழுதுமே கெடாமல் நமது அன்பு...
அன்புடன்
ரசிகவ் ஞானியார்
--~--~---------~--~----~------------~-------~--~----~
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
-~----------~----~----~----~------~----~------~--~---
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home